மாவட்டம் முழுவதும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு


மாவட்டம் முழுவதும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 7 Jan 2020 3:45 AM IST (Updated: 7 Jan 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், நேற்று பதவி ஏற்றனர்.

திண்டுக்கல்,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 23 மாவட்ட கவுன்சிலர்கள், 232 ஒன்றிய கவுன்சிலர்கள், 306 ஊராட்சி தலைவர்கள், 2 ஆயிரத்து 772 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 333 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 476 பேர் போட்டியின்றி தேர்வாகினர். மேலும் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ந்தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், நேற்று பதவி ஏற்றனர். இதில் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்வானவர்கள், அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் பதவி ஏற்றுக் கொண்டனர். அதேபோல் 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர்களும், மாவட்ட ஊராட்சி செயலாளர் அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர்களும் பதவி ஏற்றனர்.

இதில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினருடன் திரண்டு வந்து பதவி ஏற்றனர். இதையடுத்து அவர்களுக்கு, ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் முன்னிலையில் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். இதையொட்டி அரசியல் கட்சியினர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குவிந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவுக்கு, சப்-கலெக்டர் உமா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏழுமலை, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க., சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story