வேளாங்கண்ணி பகுதியில், நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
வேளாங்கண்ணி பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தெற்குபொய்கைநல்லூர், பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி, வேதாரண்யம் ஆகிய பகுதிகள் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.
மேலும் அவர்கள் சாகுபடி செய்திருந்த மாமரம், தென்னை மரங்கள், சவுக்கு மரங்கள் மற்றும் வேர்கடலை பயிர், காய்கறிகள் முழுவதும் சேதம் அடைந்தன.
இந்தநிலையில் சேதமடைந்த மரங்களை அப்புறப்படுத்தி விட்டு, விவசாய நிலங்களை சீரமைத்தனர். பின்னர் அந்த பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வேளாங்கண்ணி, தெற்குபொய்கைநல்லூர், பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைவரும் கஜா புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்டோம். தற்போது விவசாய நிலங்களை சீரமைத்து நிலக்கடலை சாகுபடி செய்துள்ளோம். அது பூக்கும் தருவாயில் உள்ளது. இந்த சமயத்தில் பூச்சி மற்றும் நோய்கள் எதுவும் தாக்கி விட கூடாது என்பதற்காக மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story