பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்
விருத்தாசலம் அருகே பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். அப்போது வேட்பாளரின் மனைவி மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் விளாங்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் வீரமுத்து, பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிக வாக்குகள் பெற்ற வீரமுத்துவை வெற்றி பெற்றதாக அறிவிக்காமல் அவரை விட குறைவான வாக்குகள் பெற்ற பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற் காக மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் கூறி வீரமுத்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் விளாங்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சி மன்ற அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற இருந்தது. இதையறிந்த வீரமுத்து மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரியும் கோஷங்களை எழுப்பினர். மேலும், ஊராட்சி மன்ற அலுவலக கதவில் ஏற்கனவே போடப்பட்டிருந்த பூட்டோடு மற்றொரு பூட்டையும் போட்டு பூட்டி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே வீரமுத்துவின் மனைவி பெரியநாயகி என்பவர் அருகில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி தொட்டியின் ஏணியில் வேகமாக மேலே ஏறினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி கீழே இறக்கினர். அப்போது திடீரென மயங்கி விழுந்த பெரியநாயகியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை வலுக்கட்டாயமாக பிடித்து போலீசார் வேனில் ஏற்றினர். அதற்கு வீரமுத்துவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து வீரமுத்து ஆதரவாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் போட்டிருந்த பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். அதன்பிறகு காலை 10.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவராக பாலகிருஷ்ணன் பதவியேற்று கொண்டார். அதனை தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர்.
கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜெயலட்சுமி ஆட்டோ சின்னத்திலும், விஜயலட்சுமி பூட்டு சாவி சின்னத்திலும் போட்டியிட்டனர். இதில் கடந்த 2-ந்தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
பின்னர் மறுநாள் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு சான்றிதழ் வழங்கினர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெயர் குழப்பத்தில் இந்த தவறு நடந்தது.
இந்த நிலையில் நேற்று காலை வாண்டராசன்குப்பத்தில் உள்ள கிராம சேவை மையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பதற்காக விஜயலட்சுமி தனது ஆதரவாளர்களுடன் கிராம சேவை மைய கட்டிடத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
இதுபற்றி அறிந்த ஜெயலட்சுமி ஆதரவாளர்கள் திரண்டு வந்து விஜயலட்சுமியை அலுவலகத்துக்கு உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவை அதிகாரிகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.
Related Tags :
Next Story