மயிலம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதல்: ஜவுளிக்கடை ஊழியர் உள்பட 2 பேர் பலி
மயிலம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள். நண்பருடன் கோவிலுக்கு சென்ற போது நேர்ந்த இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சென்னகுணம் கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் மகன் சீனிவாசன்(வயது 36). விழுப்புரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை சென்னகுணத்துக்கு வந்திருந்த தனது நண்பரான கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வேளாண்பூண்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேந்திரன்(38) என்பவருடன் மயிலம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக ஸ்கூட்டரில் மயிலம் நோக்கி புறப்பட்டார்.
ஸ்கூட்டரை சீனிவாசன் ஓட்டிச் சென்றார். மயிலம் அடுத்த செண்டூர் அருகே சென்றபோது அங்குள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சீனிவாசன், மகேந்திரன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் நெடுஞ்சாலை பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான 2 வாகனங்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்கு சென்றபோது கார் மோதி நண்பருடன் ஜவுளிக்கடை ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story