சென்னை புத்தக கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி: 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தகம் வாசித்து சாதனை


சென்னை புத்தக கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி: 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தகம் வாசித்து சாதனை
x
தினத்தந்தி 7 Jan 2020 5:26 AM IST (Updated: 7 Jan 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புத்தக கண்காட்சி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. இதன் முன்னோட்டமாக ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் புத்தகங்களை வாசித்து சாதனை படைத்தனர்.

சென்னை,

தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்(பபாசி) சார்பில் 43-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 9-ந்தேதி தொடங்குகிறது. 21-ந்தேதி வரை 13 நாட்கள் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

வேலைநாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும்.

இந்த புத்தக கண்காட்சியின் முன்னோட்டமாக ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சியை ‘பபாசி’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடத்தியது.

பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 5 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் புத்தகங்களை வாசித்தனர்.

அதாவது பபாசி வழங்கிய புத்தகங்களை சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் தமிழில் வாசித்தனர்.

இந்த சாதனை நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பங்களிப்பு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.கே. முருகன், பொருளாளர் ஆ.கோமதிநாயகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story