கரும்புகளை தேடி திம்பம் மலைப்பாதைக்கு வரும் யானை கூட்டம்


கரும்புகளை தேடி திம்பம் மலைப்பாதைக்கு வரும் யானை கூட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2020 11:00 PM GMT (Updated: 7 Jan 2020 4:25 PM GMT)

கரும்புகளை தேடி திம்பம்மலைப் பாதைக்கு யானைகள் கூட்டமாக வருகின்றன.

சத்தியமங்கலம், 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாகத்தான் கர்நாடகா செல்லும் முக்கிய பாதையும் அமைந்து உள்ளது. அதனால் எப்போதும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் திரும்ப முடியாமல் அடிக்கடி நின்று விடுகின்றன. அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதை தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார் குறிப்பிட்ட உயரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைத்துள்ளார்கள். அதிக உயரத்தில் பாரம் ஏற்றி வரும் லாரிகள் செல்ல முடியாது.

இந்தநிலையில் லாரியில் அதிக உயரத்தில் கரும்பு பாரம் ஏற்றிவரும் டிரைவர்கள் இரும்பு தடுப்பை கடந்து செல்வதற்காக சில கரும்பு கட்டுகளை எடுத்து மலைப்பாதை ஓரம் போட்டு விட்டு சென்றுவிடுகிறார்கள். இவ்வாறு போடப்படும் கரும்புகளை தின்பதற்காக யானைகள் வனப்பகுதியில் இருந்து திம்பம் மலைப்பாதைக்கு வரத்தொடங்கி உள்ளன.

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி நடுரோட்டுக்கு வந்து கரும்பு கட்டுகளை தேடுகின்றன. இதனால் லாரி டிரைவர்கள் கரும்பு கட்டுகளை மலைப்பாதையில் போடக்கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். ஆனால் அதையும் மீறி டிரைவர் கரும்புகட்டுகளை போட்டு செல்கிறார்கள்.

நேற்று முன்தினம் மாலை தாளவாடியில் இருந்து சத்தியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாாி வந்தது. 2-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது டிரைவர் 2 கரும்பு கட்டுகளை தூக்கி மலைப்பாதை ஓரம் போட்டுவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் 3 யானைகள் கூட்டமாக வந்து கரும்புகளை சுவைத்தபடியே ரோட்டு ஓரம் நின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே நின்றுகொண்டார்கள். யானைகள் மலைப்பாதையை விட்டு, காட்டுக்குள் இறங்கி சென்ற பின்னர்தான் வாகனங்கள் செல்ல தொடங்கின.

இதேபோல் நேற்று முன்தினம் இரவு 3 யானைகள் திம்பம் மலைப்பாதைக்கு வந்து கரும்புகளை தேடின. அப்போது ஒரு லாாி வந்தது. அதில் கரும்பு கட்டுகள் இருக்கும் என்று யானைகள் லாரியை மறித்து பின்னால் சென்று தேடின. அதனால் கரும்புகளை போட்டு செல்லும் லாரி டிரைவர்கள் மீது நடவடிக்ைக எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.

Next Story