கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 20 புதிய சொகுசு பஸ்களின் சேவை தொடக்கம்; எடியூரப்பா தொடங்கி வைத்தார்


கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 20 புதிய சொகுசு பஸ்களின் சேவை தொடக்கம்; எடியூரப்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Jan 2020 5:45 AM IST (Updated: 8 Jan 2020 12:22 AM IST)
t-max-icont-min-icon

கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 20 புதிய சொகுசு பஸ்களின் சேவையை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் புதிதாக 20 சொகுசு பஸ்களின் போக்குவரத்து சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, கொடி அசைத்து புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்கள், உலக தரத்தில் பல்வேறு வகையான பஸ்களை அறிமுகம் செய்கிறது. புதிய பஸ் நிலையங்களை அமைத்தல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பஸ்களை பாதுகாப்பாக இயக்குவது போன்ற முயற்சியில் போக்குவரத்து கழகங்கள் ஈடுபட்டுள்ளன. இது பாராட்டுக்குரியது.

பல்வேறு சேவைகளை பாராட்டி அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இதுவரை 240 விருதுகள் கிடைத்துள்ளன. பயணிகளுக்கு கர்நாடகத்திற்குள்ளும், பிற மாநிலங்களுக்கும் சொகுசான பயண வசதிகளை செய்து கொடுக்கின்றன. அரசு போக்குவரத்து கழகங்களுக்காக விரைவில் புதிதாக 320 சொகுசு பஸ்கள் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

பிரிம்கிளாஸ் பஸ்கள்- 5, ஐராவத் கிளப் பஸ்கள்- 3, ஐராவத் பஸ்கள்-4, குளுகுளு வசதி இல்லாத படுக்கை வசதியுடைய பஸ்- 1, ராஜஹம்ச பஸ்கள்-2, சாதாரண பஸ்கள்- 5 என ெமாத்தம் 20 புதிய சொகுசு பஸ்களின் போக்குவரத்து சேவை நேற்று தொடங்கப்பட்டது.

இந்த பஸ்கள் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம், ஐதராபாத், நெல்லூர், ராய்ச்சூர், சீரடி, ஸ்ரீசைலம், சென்னை, சபரிமலை பம்பா, சிருங்கேரி, தாவணகெரே, சிக்கமகளூரு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஷிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் போக்குவரத்து துறையை தன்வசம் கொண்டுள்ள துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story