நாமக்கல்லில், குடியரசு தினவிழா ஆலோசனை கூட்டம் - கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது


நாமக்கல்லில், குடியரசு தினவிழா ஆலோசனை கூட்டம் - கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 7 Jan 2020 10:15 PM GMT (Updated: 7 Jan 2020 7:13 PM GMT)

நாமக்கல்லில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினவிழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-

குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடிட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். விழா நடைபெறும் இடத்தினை சுத்தம் செய்தல் வேண்டும். மேலும் பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு நடமாடும் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும்.

சிறப்பு விருந்தினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அமர உரிய இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும். கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெறும் மாணவ, மாணவிகளை பள்ளியில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வர வாகனங்கள் ஏற்பாடு செய்திட வேண்டும்.

விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏதுவாக நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சிறப்பு பஸ்களை இயக்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டை குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story