கலசபாக்கம் அருகே, புதுப்பெண் மர்மச்சாவு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை


கலசபாக்கம் அருகே, புதுப்பெண் மர்மச்சாவு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Jan 2020 3:30 AM IST (Updated: 8 Jan 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் முகத்தில் காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து உள்ளதால் கொலையா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலசபாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த கீழ்பொத்தரை ஊராட்சிக்கு உட்பட்ட தென்னகரம் கிராமத்தை சேர்ந்த சுந்தரத்தின் மகன் ராமு (வயது 35), விவசாயி. இவருக்கும் கடலாடி குளத்து மேட்டு தெருவைச் சேர்ந்த ஜெயபாரதி (21) என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. ராமுக்கும், ஜெயபாரதிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயபாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ராமு ஜெயபாரதியின் தந்தை சரவணனிடம் தகவல் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் மற்றும் உறவினர்கள் தென்னகரம் கிராமத்திற்கு வந்து ஜெயபாரதியை பார்த்தபோது முகம் மற்றும் முதுகு பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து சரவணன் கலசபாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் மர்மம் உள்ளது, அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க வைத்துள்ளதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஜெயபாரதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story