வண்டலூர் பூங்காவில் கலெக்டர் ஆய்வு


வண்டலூர் பூங்காவில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Jan 2020 10:15 PM GMT (Updated: 7 Jan 2020 8:21 PM GMT)

வண்டலூர் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் வண்டலூர் பூங்கா அலுவலகத்தில் நடைபெற்றது.

வண்டலூர்,

பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் வண்டலூர் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி இங்கு வரும் பொதுமக்களுக்கு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் வண்டலூர் பூங்கா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காவில் நுழைவு கட்டண டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைப்பது, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வசதிக்காக 150-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயங்குவது, பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் தனியாக வாகன நிறுத்துமிடம் அமைத்து கொடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

மேலும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி பூங்காவுக்கு செல்வதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார், கல்லூரிகளை சேர்ந்த என்.எஸ். எஸ்., என்.சி.சி. மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்பட 500 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது, பார்வையாளர்கள் வசதிக்காக பூங்காவில் பல்வேறு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், கூடுதல் கழிவறை வசதிகளும், பூங்காவினுள் மருத்துவ முதல் உதவி மையங்கள் பூங்காவிற்கு வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு என பூங்காவில் 2 இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் பூங்காவில் ஆய்வு பணியை மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், வண்டலூர் பூங்கா துணை இயக்குனர் சுதா ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநகர போக்குவரத்து, தீயணைப்பு, மின்சாரம், வனத்துறை உள்பட 15-க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story