அதிகாரிகள் ஒருமையில் பேசியதாக, கலெக்டர் கார் முன்பு அமர்ந்து பொதுமக்கள் தர்ணா - ராணிப்பேட்டையில் பரபரப்பு


அதிகாரிகள் ஒருமையில் பேசியதாக, கலெக்டர் கார் முன்பு அமர்ந்து பொதுமக்கள் தர்ணா - ராணிப்பேட்டையில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Jan 2020 10:00 PM GMT (Updated: 7 Jan 2020 8:36 PM GMT)

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாது என்றும், ஒருமையில் பேசியதாகவும்நகராட்சி அதிகாரிகள் மீதுபுகார் கூறி பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுவினர் ராணிப்பேட்டையில் கலெக்டர் கார்முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பைபாஸ் ரோடு ஈஸ்வரன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தி்ல் நேற்றுமுன்தினம் நடந்த மக்கள்குறைதீர்வுநாள் கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் ஒரு கோரிக்கைமனு கொடுத்தனர்.

அதில் தங்கள் ஊரில் கால்வாய் வசதி, தெருவிளக்கு, சிமெண்டுசாலை, சுகாதார வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும் என்று கூறியிருந்தனர். அதைத்தொடர்ந்து மேல்விஷாரம் நகராட்சி அதிகாரிகள் ஈஸ்வரன் கோவில் தெரு பகுதிக்கு நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஈஸ்வரன் கோவில் தெருப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுவினர் மீண்டும் கலெக்டரை சந்தித்து மனுகொடுக்க வந்தனர். அப்போது கலெக்டர் திவ்யதர்ஷினி அவருடைய அறையில் அதிகாரிகளுடன் கூட்டத்தில் இருந்துள்ளார். இதற்கிடையே மனுகொடுக்க வந்த பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுவினர் திடீரென அங்கு நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் கார் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பொதுமக்கள் மற்றும் மகளிர்குழுவினர் சிலரை கலெக்டர் அழைத்து பேசினார். அப்போது அவர்கள், நாங்கள் கொடுத்த மனுதொடர்பாக எங்கள் பகுதியை பார்வையிட வந்த நகராட்சி அதிகாரிகள் கால்வாய் வசதி செய்து தரமுடியாது, மழைநீர் செல்வதற்குதான் கால்வாய், வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீருக்கு நாங்கள் பொறுப்பல்ல, அடிப்படை வசதிகள் செய்து தரமுடியாது என்று கூறியதுடன், தங்களை, ஒருமையில் பேசியதாகக்கூறி புகார் மனு கொடுத்தனர்.

பொதுமக்களின்புகாரை கேட்டுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து நேரில் பார்ைவயிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story