பணம் கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலி கழுத்தை அறுத்து கொலை - போலீசில் தொழிலாளி சரண்


பணம் கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலி கழுத்தை அறுத்து கொலை - போலீசில் தொழிலாளி சரண்
x
தினத்தந்தி 8 Jan 2020 4:30 AM IST (Updated: 8 Jan 2020 3:13 AM IST)
t-max-icont-min-icon

அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், சங்கரன்கோவில் சாலையில் உள்ள எம்.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன் (வயது39). நெல்லை மாவட்டம் கல்லக்குடியை பூர்வீகமாக கொண்ட இவருக்கும், தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த ராமலட்சுமி (35) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோமதிநாயகம் (9) என்ற மகனும், சந்தனமாரி (6) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக இவர்கள் ராஜபாளையத்தில் உள்ள எம்.ஆர். நகரில் வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தனர். முருகன் தனது மனைவியை ராஜபாளையத்தில் விட்டு விட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது குழந்தைகள் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராமலட்சுமிக்கும், இவரது உறவினரான முகில்வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்த தொழிலாளியான சண்முகம் (40) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சண்முகத்திற்கும் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் அடிக்கடி பணம் கேட்டு சண்முகத்தை, ராமலட்சுமி தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று பகல் 3 மணி அளவில் ராமலட்சுமி வீட்டிற்கு எதிரே தெருவில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை சண்முகம் எடுத்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் ராமலட்சுமியை கீழே தள்ளி அவரது வாயைப்பொத்தி கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் ராமலட்சுமி துடிதுடிக்க அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் சண்முகம், ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.

அவரது தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ராமலட்சுமியின் உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story