கோவை பஸ் நிலையத்தில், போதை ஆசாமியிடம் போலீஸ் என்று கூறி பணம் பறிப்பு - 2 பேர் கைது


கோவை பஸ் நிலையத்தில், போதை ஆசாமியிடம் போலீஸ் என்று கூறி பணம் பறிப்பு - 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2020 9:45 PM GMT (Updated: 7 Jan 2020 9:43 PM GMT)

கோவை பஸ்நிலையத்தில் போதை ஆசாமியிடம் போலீஸ் என்று கூறி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பாகல்பட்டி பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). கூலித்தொழிலாளி. கோவை வந்த இவர் நேற்று காலை காந்திபுரம் மத்திய பஸ்நிலையத்தில் குடிபோதையில் நின்று இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரிடம் சென்று தாங்கள் போலீஸ் என்றும், திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க சாதாரண உடையில் வந்து இருப்பதாகவும், பஸ்நிலையத்தில் குடிபோதையில் நின்றதால் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறி சிவக்குமாரை மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்துபோன சிவக்குமார் தன்னிடம் இருந்த ரூ.200-ஐ அவர்களிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்டதும் அந்த மர்ம ஆசாமிகள் அங்கு இருந்து சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு உண்மையான போலீசார் ரோந்து வந்தனர். அவர்களிடம் சிவக்குமார் தன்னிடம் 2 பேர் போலீஸ் என்று கூறி பணம் பறித்து சென்றது குறித்து கூறினார்.

இதையடுத்து உஷாராண போலீசார் சிவக்குமாரை அழைத்துக்கொண்டு பஸ்நிலைய பகுதியில் மர்ம ஆசாமிகளை தேடினர். அப்போது அங்கு நின்று இருந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கோவை காந்திபுரம் 6-வது வீதியை சேர்ந்த அபுதாகீர் (40), மேட்டுப்பாளையம் அருகே காட்டூரை சேர்ந்த ஆனந்தன் (55) என்பதும், இவர்கள் தான் சிவக்குமாரிடம் போலீஸ் என்று கூறி ஏமாற்றி பணம் பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைதுசெய்தனர். தொடர்ந்து இவா்கள் இதுபோன்று வேறு யாருடனும் பணம் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story