ஆக்கிரமிப்பில் இருந்த ஓட்டல் இடிப்பு நகராட்சி அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


ஆக்கிரமிப்பில் இருந்த ஓட்டல் இடிப்பு நகராட்சி அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Jan 2020 4:20 AM IST (Updated: 8 Jan 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் ஆக்கிரமிப்பில் இருந்த ஓட்டலை நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர். மற்றொரு கட்டிடத்தை அகற்ற முயன்றபோது, அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தையொட்டிய அரசு ஆஸ்பத்திரி சாலையில் சில கடைகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள கடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கடைக்கு வெளியே பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து வியாபாரம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கரூர் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே நகராட்சி சார்பில் பெட்டிக்கடை வைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிமீறி சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து நேற்று காலை கரூர் நகரமைப்பு அதிகாரி அன்பு, வருவாய் அதிகாரி பாஸ்கரன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர்.

அப்போது அதிகாரிகள், அங்கு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்த பெட்டிக்கடையானது, சிறிய ஓட்டல் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு இடத்தில் இயங்குகிறது. எனவே இங்கிருந்து பொருட்களை எடுத்து செல்லுங்கள். ஆக்கிரமிப்பை இடித்து அகற்றப்போகிறோம் என்று அங்கிருந்தவர்களிடம் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் பொக்லைன் எந்திரம் முன்பு வந்து நின்றனர்.

அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர், அந்த ஓட்டல் கட்டிடம் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் ஒரு பெட்டிக்கடையின் முன்புறத்தில் இருந்த ஆக்கிரமிப்பு உள்ளிட்டவையும் அகற்றப்பட்டது.

அங்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் மகேஸ்வரியின் பராமரிப்பில், ஜெராக்ஸ் கடை கட்டிடமும் உள்ளது. அதனையும் அதிகாரிகள் அகற்ற சென்றனர். அப்போது அங்கு வக்கீல்களுடன் தி.மு.க.வினர் திரண்டனர். பின்னர், ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக காலஅவகாசம் கேட்டிருக்கிறோம். உடனே வந்து அகற்றுவது எப்படி நியாயம்? என்று கேட்டு, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், கோர்ட்டில் உரிய அனுமதி பெற்று விரைவில் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படும் என்று கூறிவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story