புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைக்காரர்களுக்கு அபராதம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைக்காரர்களுக்கு அபராதம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2020 3:45 AM IST (Updated: 8 Jan 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்கவேல், கேசவராஜ், பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திருப்பூர் மாநகராட்சி பகுதி, பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் உள்ள கடைகள், டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தினார்கள்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்யும் நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவு விடுதிகள், சிறு தள்ளுவண்டிகள், துரித உணவகங்கள், சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படுவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு புஷ்பா தியேட்டர், குமார் நகர், ஆஷர்மில் பஸ் நிறுத்தம், புதிய பஸ் நிலையம், பல்லடம் பஸ் நிலையம், பொல்லிகாளிபாளையம் பகுதிகளில் மளிகை கடைகள், டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 5 கடை உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்பிரிவின் கீழ் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 3 நாட்களுக்குள் அபராத தொகையை செலான் மூலமாக அரசு கருவூலத்தில் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வில் 3 கடைகளில் இருந்து 2 கிலோ பாலித்தீன் பைகள், தயாரிப்பு தேதி குறிப்பிடாத 2 கிலோ பண்டங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்து வந்த வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

Next Story