நிதி நிறுவனம் நடத்தி ரூ.8½ கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முற்றுகை
நிதி நிறுவனம் நடத்தி ரூ.8½ கோடி மோசடி செய்யப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் கிளைகள் மார்த்தாண்டம், நெய்யாற்றின் கரை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கடலூர், கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் செயல்பட்டு வந்தது. இந்த நிதிநிறுவனத்தில் மாதம்தோறும் பணம் முதலீடு செய்தால் குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு கூடுதல் தொகை தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தினர். முதிர்வு காலம் முடிந்த பின்பு நிதி நிறுவனம் கூறியபடி முதலீடு செய்தவர்களுக்கு பணம் வழங்காமல் ரூ.8½ கோடி மோசடி செய்யப்பட்டது.
இதையடுத்து முதலீட்டாளர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள நிதிநிறுவன அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நிதி நிறுவனம் சார்பில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாக தெவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மோசடி தொடர்பாக நிதி நிறுவன அதிபர் நாகர்கோவில் நெசவாளர் காலனியை சேர்ந்த பிரவீன் (வயது 38), இயக்குனர் விழுந்தயம்பலம் பனங்காலவிளையை சேர்ந்த சோபன் (42), முகவர் அருமனை மாத்தூர்கோணம் ரெதீஸ் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிதி நிறுவனத்தில் கட்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story