கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2020 10:30 PM GMT (Updated: 8 Jan 2020 12:39 AM GMT)

மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் மே.மாத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராயர் மகன் கலைச்செல்வன் (வயது 33). இவர் மணல் கடத்தலை தடுப்பதற்காக சம்பவத்தன்று மேமாத்தூர் மணிமுக்தாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை அவர் வழிமறித்தார். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல், கலைச்செல்வன் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் விலகி உயிர் தப்பினார்.

பின்னர் இதுகுறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயன்றது கச்சிபெருமாநத்தத்தை சேர்ந்த சின்னக்கண்ணு மகன் சிவக்குமார்(27) என்பதும், அவர் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிவக்குமாரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான சிவக்குமார் மீது வேப்பூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் மணல் கடத்தல் வழக்கும் உள்ளது. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு, சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாரிடம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.

Next Story