மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 397 பேர் கைது


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 397 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2020 3:45 AM IST (Updated: 8 Jan 2020 10:15 PM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூரில் மறியலில் ஈடுபட்ட 397 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், 

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. சமையல் எரிவாயு சிலிண்டர், ரெயில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதந்தோறும் ரூ.21 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிலாளர் விரோத போக்கினை கடைபிடித்து வருவதாக மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினரான தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. எச்.எம்.எஸ், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் பொது வேலை நிறுத்தம்-மறியல் போராட்டம் நடந்தது.

முன்னதாக மறியல் போராட்டம் நடத்துவதற்காக பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று காலை தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரண்டனர்.இருப்பினும் ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென்று தொழிற்சங்கத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள சாலைக்கு ஓடி வந்து அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அவர்கள் தொழிலாளர் விரோத போக்கினை கடைபிடிப்பதாக மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலை கைவிடவில்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போராட்டக்காரர்களை போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் தொடர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 266 அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், தொழிற்சங்கங்களை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 131 என மொத்தம் 397 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து வேன்களில் ஏற்றி, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம், உதவியாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் மணிமேகலை, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின், ஏ.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஞானசேகரன் எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story