அதிக வட்டி தருவதாக கூறி ஆன்லைன் நிறுவனம் நடத்தி ரூ.15 லட்சம் மோசடி - கேரளாவை சேர்ந்தவர் கைது


அதிக வட்டி தருவதாக கூறி ஆன்லைன் நிறுவனம் நடத்தி ரூ.15 லட்சம் மோசடி - கேரளாவை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2020 10:15 PM GMT (Updated: 8 Jan 2020 7:15 PM GMT)

கோவையில் அதிக வட்டி தருவதாக கூறி ஆன்லைன் நிறுவனம் நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்த கேரளாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் போனி தாமஸ் (வயது 40). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் அலமு நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கினார். பின்னர் அவர் அங்கேயே ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அந்த பணத்தை தங்கம், பங்குசந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வோம். அதில் இருந்து அதிகளவில் வருமானம் கிடைப்பதால் ரூ.2,500 வட்டியாக கொடுப்போம் என்று அறிவித்தார். இவ்வாறு 150 நாட்களுக்கு தினமும் ரூ.2500 கொடுக்கப்படும் என்றும், 150 நாட்களுக்கு பின்னர் முதலீடு செய்த பணமும் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதை நம்பி கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் முதலீடு செய்தனர். அவர்கள் அனைவரின் வங்கி கணக்கில் தினமும் ரூ.2,500 செலுத்தப்பட்டது. 20 நாட்களுக்கு பின்னர் யாருக்கும் பணம் செலுத்தப்படவில்லை. உடனே அவர்கள் போனி தாமஸ் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அவர்கள் அலமு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றபோது அவர் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அவர்கள் விசாரித்தபோது போனி தாமஸ் இதுபோன்று ஏராளமானோரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

இதற்கிடையே, அவர் கோவை சாய்பாபாகாலனியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, போனி தாமஸ் ஏராளமானோரிடம் பணம் பெற்று ரூ.15 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் நடத்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் அறிவித்து உள்ளனர்.

Next Story