மதுரையில் வீடு புகுந்து பயங்கரம்: இளம்பெண் குத்திக்கொலை; மாமியாருக்கும் கத்திக்குத்து - தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு


மதுரையில் வீடு புகுந்து பயங்கரம்: இளம்பெண் குத்திக்கொலை; மாமியாருக்கும் கத்திக்குத்து - தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Jan 2020 5:00 AM IST (Updated: 9 Jan 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வீடு புகுந்து இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவருடைய மாமியாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மதுரை,

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை பாரதி உலா வீதியை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மனைவி சீனியம்மாள்(வயது 58). இவர்களுக்கு குமரகுரு என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

இ்ந்தநிலையில் 2010-ம் ஆண்டு மாரியப்பன் இறந்து விட்டார். இதையடுத்து பாத்திரக்கடையை தாயார் சீனியம்மாளுடன் சேர்ந்து குமரகுரு கவனித்து வருகிறார்.

குமரகுருவிற்கு லாவண்யா என்பவருடன் திருமணம் முடிந்து 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு லாவண்யா வீட்டின் முதல் தளத்தில் 2 மகள்களுடன் படுத்திருந்தார். தரைதளத்தில் உள்ள ஒரு அறையில் குமரகுருவும், ஹால் பகுதியில் சீனியம்மாளும் படுத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் 2 மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் நேராக முதல் தளத்திற்கு சென்று அங்கு படுத்திருந்த லாவண்யாவை சரமாரியாக கத்தியால் குத்தினர். சத்தம் கேட்டு எழுந்த மூத்த மகள் புண்யா அலறினாள். உடனே அவள் பதற்றத்துடன் கீழே வந்து பாட்டியிடம் நடந்த விஷயத்தை கூறினார்.

அப்போது அந்த மர்மநபர்கள் கீழே இறங்கி வந்தபோது சீனியம்மாள் அவர்களை தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டனர்.

இதற்கிடையில் சத்தம்கேட்டு குமரகுரு வெளியே வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் தாயார் கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் மாடியில் உள்ள அறையில் லாவண்யாவும் கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதை அவரது மகள் அழுது கொண்டே தெரிவித்தாள். உடனே அவர் மாடிக்கு சென்று பார்த்த போது லாவண்யா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இந்த தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து சீனியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் கார்த்திக் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் லாவண்யாவின் உடலை தல்லாகுளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் லாவண்யாவை கொலை செய்தது யார்?, இந்த கொலை எதற்காக நடந்தது, குடும்ப பிரச்சினையா அல்லது சொத்து பிரச்சினையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் லாவண்யாவை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற மர்மநபர்களையும் தேடி வருகிறார்கள்.

Next Story