வெடிமருந்து தொழிற்சாலையில், தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்
குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்,
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அகில இந்திய அளவில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சி.எப்.எல்.யு., ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்தபோராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும் ஏ முதல் டி பிரிவு அதிகாரிகள், கிளரிக்கல் பிரிவினர் மற்றும் டி.எப்.எல்.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த 200 பேர் பணிக்கு சென்றனர்.
வேலை நிறுத்தத்தை தொடர்ந்து சி.எப்.எல்.யு., ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணியும், நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.எப்.எல்.யு. தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. பொதுசெயலாளர் திலிப் குமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் வெடிமருந்து தொழிற்சாலையை பொது துறை நிறுவனமாக மாற்றக்கூடாது, புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை விற்பனை செய்யக்கூடாது, 8 மணி பணி நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்கும் பரிந்துரையை ஏற்கக்கூடாது என்பது போன்ற கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பப்பட்டது. சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் பத்ரி கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜோசிலாசர், ஜெயக்குமார், ரவி, ராஜ்குமார், தியாகராஜன், செந்தில்குமார் உள்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனைதொடர்ந்து குன்னூர் வி.பி. தெருவில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் பத்ரி, ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் போஜராஜன் உள்பட 113 பேரை குன்னூர் நகர போலீசார் கைது செய்தனர்.
போராட்டம் குறித்து சி.எப்.எல்.யு. தலைவர் அசோகன், ஐ.என்.டி.யு.சி. பொதுசெயலாளர் திலிப் குமார் ஆகியோர் கூறியதாவது:-
மத்திய பாதுகாப்பு துறையை பொறுத்தவரை தமிழகத்தில் சென்னை ஆவடி, திருச்சி, அருவங்காடு ஆகிய இடங்களில் பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் உள்ளன. இன்று (நேற்று) நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மற்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பங்களிப்பு கணிசமாக இருந்தது. அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை பொறுத்தவரை 90 சதவீதம் வேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இந்த போராட்டத்தின் வெற்றி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இதன்காரணமாக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறி னார்கள்.
Related Tags :
Next Story