குமரி சோதனை சாவடியில் பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் சுட்டு கொலை - காரில் வந்த கும்பல் அட்டூழியம்


குமரி சோதனை சாவடியில் பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் சுட்டு கொலை - காரில் வந்த கும்பல் அட்டூழியம்
x
தினத்தந்தி 9 Jan 2020 3:45 AM IST (Updated: 9 Jan 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சோதனை சாவடியில் பணியில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது. இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கன்னியாகுமரி,

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்துவதை தடுப்பதற்காக குமரி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக தமிழக-கேரள எல்லையில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது.

இதேபோல் களியக்காவிளை- மார்த்தாண்டம் சந்தைரோட்டில் மணல் கடத்தலை தடுப்பதற்காக தனி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணி அமர்த்தப்பட்டதால், ஒரு போலீஸ்காரர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு இந்த சோதனை சாவடியில் களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 55) என்பவர் பணியில் இருந்துள்ளார். இரவு சுமார் 9.40 மணி அளவில் சோதனை சாவடி அருகே கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், சோதனைசாவடிக்கு சென்று அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பின்னர் திடீரென அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத வில்சனின் மார்பு, கழுத்து, வலது தொடை ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள், தாங்கள் வந்த காரிலேயே தப்பி விட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் சோதனைசாவடி நோக்கி ஓடி வந்தனர். அங்கு குற்றுயிரும், குலையிருமாக உயிருக்கு போராடிய வில்சனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வில்சனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

மணல் கடத்தல் விவகாரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டாரா? அல்லது வில்சனுடன் ஏற்பட்ட முன்விரோத தகராறில் யாரேனும் தீர்த்து கட்டினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியால் சுட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story