மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 600 பேர் கைது


மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 600 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2020 5:44 AM IST (Updated: 9 Jan 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கனூர்,

முழு அடைப்பு போராட்டத்தை யொட்டி நேற்று தொழிற்சங்கத்தினர் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதகடிப்பட்டு காமராஜர் நினைவு தூண் அருகே விடுதலை சிறுத்தைகள் வடிவேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர் பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு ரவி தலைமையில் ஏராளமானோர் காலை 10 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 110 பேரை கைது செய்தனர்.

திருக்கனூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. திருக்கனூர் கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பத்தில் நடந்த போராட்டத்தில் அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரியாங்குப்பம் மாதா கோவிலில் இருந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாக புறவழி சாலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் 8 பெண்கள் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்தனர். அவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

பாகூரில் நடந்த மறியலில் சி.ஐ.டி.யு. தமிழ்செல்வம், கலியன், ஏ.ஐ.டி.யு.சி. ராமமூர்த்தி, எல்.எல்.எப். தமிழ்வளவன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அங்கு 105 பேரை போலீசார் கைது செய்தனர். பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

சேதராப்பட்டில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு இருந்தன. சி.ஐ.டி.யு. மாநில பொருளாளர் பிரபுராஜ் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடந்தது. இதில் 25 பெண்கள் உள்பட 125 பேர் கைது செய்யப்பட்டனர். ஏ.ஐ.சி.டி.யு. மாநில நிர்வாகி மோதிலால் தலைமையில் இருசக்கர வாகனங்களில் புதுப்பேட்டை முழுவதும் சென்று கடைகளை அடைக்குமாறு வலியுறுத்தினர். இதையடுத்து அங்கு மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப் பட்டனர்.

Next Story