6¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் தகவல்


6¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Jan 2020 10:45 PM GMT (Updated: 9 Jan 2020 2:42 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 6¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு, 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

அதன்படி ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.1,000, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீளம் உள்ள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5-ந்தேதி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1,000, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 76 ஆயிரத்து 218 ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன் ரூ.71 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.14 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது’ என்றார்.

ஈரோடு சங்குநகர் பகுதியை சேர்ந்த மாவூப்ஜான் கூறும்போது, ‘பொங்கல் திருநாளையொட்டி பல ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா வேட்டி -சேலைகளை ரேஷன் கடைகளில் இருந்து முறையாக பெற்று வருகிறேன். மாற்றுத்திறனாளியான நான் சமுதாயமும், மற்றவர்களும் கைவிட்ட நிலையில் மற்றவர்களை எதிர்பார்க்காமல் தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திட தமிழக முதல் -அமைச்சர் விலையில்லா வேட்டி -சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கி உள்ளார். எனவே முதல் -அமைச்சருக்கு என்னை போன்ற ஆதரவற்ற ஏழை, எளியோரின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

கோபி குள்ளம்பாளையத்தை சேர்ந்த சாமியாத்தாள் கூறும்போது, ‘அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கி உள்ளார். இத்தகைய சிறப்பான திட்டத்தை செயல்படுத்திய முதல் -அமைச்சருக்கு நன்றி’ என்றார்.

Next Story