பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்; சித்தராமையா குற்றச்சாட்டு


பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்;  சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Jan 2020 11:45 PM GMT (Updated: 9 Jan 2020 4:42 PM GMT)

நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி சர்வாதிகாரியை போல் செயல்படுகிறார். நாட்டில் ஜனநாயகம் இல்லை. அரசியல் சாசனப்படி அனைத்து மதத்தினருக்கும் உரிமை வழங்க வேண்டும். ஆனால் இங்கு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மத்திய பா.ஜனதா அரசு செயல்படுகிறது.

டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசின் உதவியுடன் மர்ம நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். டெல்லி போலீஸ், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அரசியல் சாசனத்தில் கருத்துகளை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை ஒடுக்க முயற்சி செய்கிறார்கள்.

மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி செலவை குறைக்க முடிவு செய்துள்ளது. அதனால் மத்திய அரசு பொருளாதார ரீதியாக திவாலாகிவிட்டது. கர்நாடகத்திற்கு சரக்கு-சேவை வரி திட்ட இழப்பீட்டை வழங்கவில்லை. அடுத்த ஆண்டு (2020-21) கர்நாடகத்திற்கு கிடைக்கும் வரி வருவாயில் பங்கு ரூ.5 ஆயிரம் கோடியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

மகதாயி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பு வந்துவிட்டது. ஆனாலும் மத்திய அரசு இ்ந்த தீர்ப்ைப அரசிதழில் வெளியிடவில்லை. கர்நாடகம் மற்றும் கோவாவில் பா.ஜனதா அரசு தான் உள்ளது. பிரதமர் இரு மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து பேசி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முடியும். ஆனால் மோடி இதில் ஆர்வம் காட்டவில்லை. கோவா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதால் அரசிதழில் தீர்ப்பை வெளியிட முடியாது என்று பா.ஜனதா தலைவர்கள் கூறுகிறார்கள்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று எனக்கு தெரியாது. அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story