எனது தாய் நாடகமாடுகிறார் : வளர்ப்பு தந்தையின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை; காதல் திருமணம் செய்த நடிகை விஜயலட்சுமி பேட்டி


எனது தாய் நாடகமாடுகிறார் : வளர்ப்பு தந்தையின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை; காதல் திருமணம் செய்த நடிகை விஜயலட்சுமி பேட்டி
x
தினத்தந்தி 10 Jan 2020 4:30 AM IST (Updated: 9 Jan 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

‘‘என் தாய் நாடகமாடுகிறார், தன்னுடைய வளர்ப்பு தந்தை சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை’’ என்று காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை விஜயலட்சுமி கூறினார்.

ராய்ச்சூர், 

கன்னட திரையுலகில் துணை நடிகையாக இருந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் ‘ஜவாரி லவ்’ உள்பட 15 கன்னட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். விஜயலட்சுமி தற்போது ‘துங்கபத்ரா’ எனும் கன்னட படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை இயக்குனர் ஆஞ்சனய்யா இயக்கி வந்தார்.

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமிக்கும், இயக்குனர் ஆஞ்சனய்யாவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், அதற்கு விஜயலட்சுமியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகை விஜயலட்சுமி தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு வெளியேறி ராய்ச்சூர் மாவட்டத்தில் வைத்து இயக்குனர் ஆஞ்சனய்யாவை திருமணம் செய்து கொண்டதாகவும், மேலும் ‘துங்கபத்ரா’ படத்தின் தயாரிப்பாளரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு ஓடிவிட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதுபற்றி அறிந்த விஜயலட்சுமியின் தாய் சவிதா, பாட்டி சென்னம்மா ஆகியோர் விஷம் குடித்தனர். இதில் பாட்டி சென்னம்மா பலியானார். சவிதாவுக்கு மண்டியா அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி, இயக்குனரும், தனது காதல் கணவருமான ஆஞ்சனய்யாவுடன் ராய்ச்சூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று காலையில் வந்தார். பின்னர் அவர் தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் தனக்கும், தனது கணவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் போலீஸ் சூப்பிரண்டு வேதமூர்த்தியை சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் அங்கிருந்து ராய்ச்சூர் மாவட்டம் சிராவாரதாஹள்ளி கிராமத்தில் உள்ள தனது கணவர் ஆஞ்சனய்யாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னை யாரும் கடத்தி வரவில்லை. நான் துங்கபத்ரா படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் ஆஞ்சனய்யாவுக்கும், எனக்கும் காதல் மலர்ந்தது. இது என்னுடைய குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஆஞ்சனய்யாவை திருமணம் செய்து கொண்டேன். நான் எந்த தயாரிப்பாளரிடம் இருந்தும் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றவில்லை.

என்னுடைய பாட்டி இறந்திருக்க மாட்டார். என்னுடைய தாய் சவிதா நாடகம் ஆடுகிறார். நான் கங்காவதியில் வைத்து திருமணம் செய்து கொண்டேன்.

என்னுடைய தாய் இதற்கு முன்பும் எனது காதல் விவகாரம் தெரிந்ததும் விஷம் குடித்ததுபோல் நாடகம் ஆடினார். இப்போதும் அவருக்கு என்னுடைய காதல் திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் தற்போதும் அவர் விஷம் குடித்துவிட்டதாக நாடகம் அரங்கேற்றி உள்ளார். என்னுடைய தந்தையும், தாயும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து 6 வருடங்கள் ஆகின்றன.

என்னுடைய தாயும், எனது வளர்ப்பு தந்தையும் எனக்கு பலவிதங்களில் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்தினர். என்னை உடலளவிலும், மனதளவிலும் சித்ரவதை செய்தனர். எனது வளர்ப்பு தந்தை என்னை கைகள், தொடைகள் உள்பட பல இடங்களில் என்னை தாக்கி காயங்கள் ஏற்படுத்தி உள்ளார்.

எனக்கு திருமணம் ஆகிவிட்டது தெரிந்ததும் தற்போது என்னுடைய கணவரை எனது வளர்ப்பு தந்தை கொல்ல திட்டம் தீட்டி வருகிறார். இதற்கு முன்பும் ஒருமுறை எனது கணவர் ஆஞ்சனய்யாவை கொல்ல திட்டம் தீட்டினர். அப்போது எனது தாய் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினர்.

அதன்பேரில் நான் எனது கணவரை விட்டு பிரிந்து தாயை பார்க்க சென்றேன். அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது எனது தாய் நாடகமாடியுள்ளார் என்று. நான் யாரிடமும் பணமோ, நகைகளோ வாங்கிக்கொண்டு ஓடிவரவில்லை. என் மீது எனது வளர்ப்பு தந்தை சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை.

எனது தாய்க்கும், என்னுடைய வளர்ப்பு தந்தைக்கும் நிறைய பணம் வேண்டும். நான் அவர்கள் சொன்னதை கேட்கவில்லை. அதனால் அவர்கள் என் கணவர் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுக்கிறார்கள். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளேன். எங்களை வாழ விடுங்கள். நான் இனியும் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story