சைதாப்பேட்டையில் குட்கா பதுக்கிய டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ‘சீல்’ - அதிகாரிகளிடம், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


சைதாப்பேட்டையில் குட்கா பதுக்கிய டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ‘சீல்’ - அதிகாரிகளிடம், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Jan 2020 3:45 AM IST (Updated: 9 Jan 2020 11:23 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சைதாப்பேட்டையில் குட்கா பதுக்கிய டிராவல்ஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூர் சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி அரசுப்பள்ளி அருகே உள்ள பெட்டி, மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே பள்ளி அருகே போதை பொருள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 6-ந் தேதி நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் மனு அளித்தனர். அதன்பேரில் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், வேலூர் தாசில்தார் சரவணமுத்து மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், சுரேஷ், கிளமெண்ட், நாகேஸ்வரன், ராஜேஷ் ஆகியோர் நேற்று காலை சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி அரசுப்பள்ளி அருகே, மெயின்பஜாரில் உள்ள பெட்டி, மளிகைக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது மெயின்பஜாரில் டிராவல்ஸ் நிறுவனத்தின் முன்பகுதியில் வைத்திருந்த பெட்டி கடையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், குட்கா, பான்மசாலா பொருட்கள் மற்றும் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அந்த பெட்டி கடைக்கு அனுமதி பெறாதது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து டிராவல்ஸ் நிறுவனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அங்கு அட்டை பெட்டியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. பெட்டி கடை, டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து 8 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைத்தனர். அதற்கு அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேரி பக்காளியம்மன் கோவில் தெரு, காந்திரோடு, பாபுராவ்தெரு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 25 கடைகளை சோதனையிட்டதில் 45 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story