மின்சாரம் தாக்காமல் இருக்க மின்வேலியில் மரத்தை முறித்து போட்டு உயிர் தப்பிய காட்டு யானை


மின்சாரம் தாக்காமல் இருக்க மின்வேலியில் மரத்தை முறித்து போட்டு உயிர் தப்பிய காட்டு யானை
x
தினத்தந்தி 10 Jan 2020 4:15 AM IST (Updated: 10 Jan 2020 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளன. இதனால் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் வனவிலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

ஹாசன், 

கடந்த சில மாதங்களாக சக்லேஷ்புரா தாலுகாவில் உள்ள கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது.

காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், தும்பிக்கையால் பிடுங்கி எறிந்தும் சேதப்படுத்தி வருகின்றன. சில சமயங்களில் காபி தோட்டங்களுக்குள் தஞ்சம் அடையும் யானைகள், அங்கு வேலை செய்பவர்களை விரட்டி வருகின்றன. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் சக்லேஷ்புரா அருகே ஆலேபேளூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க விளைநிலங்களை சுற்றி சோலார் மின்வேலி அமைத்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, ஆலேபேளூரில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்தது.

பின்னர் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் நிலத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்து காட்டு யானை வெளியேற முயன்றது.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த நிலத்தை சுற்றி சோலார் மின்வேலி பொருத்தப்பட்டு இருந்ததை காட்டு யானை கவனித்தது.

இதனால் தன் மீது மின்சாரம் தாக்காமல் இருக்க சோலார் மின்வேலி அருகே உள்ள ஒரு மரத்தை காட்டு யானை தனது தும்பிக்கையாலும், காலாலும் முறித்து சோலார் மின்வேலி மீது போட்டது. இதனால் அந்த மின்வேலியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த மின்வேலியை காட்டு யானை சாவகாசமாக தாண்டி சென்று உயிர் தப்பியது.

மின்வேலியின் மீது மரத்தை முறித்து போட்டு யானை உயிர் தப்பிய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story