பொங்கல் பரிசை அ.தி.மு.க.வினர் வழங்க அ.ம.மு.க.வினர் கடும் எதிர்ப்பு - திண்டுக்கல்லில் பரபரப்பு


பொங்கல் பரிசை அ.தி.மு.க.வினர் வழங்க அ.ம.மு.க.வினர் கடும் எதிர்ப்பு - திண்டுக்கல்லில் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Jan 2020 4:00 AM IST (Updated: 10 Jan 2020 12:41 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் உள்ள ஒரு ரே‌‌ஷன் கடையில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசை அ.தி.மு.க.வினர் வழங்க அ.ம.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ரே‌‌ஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, உலர் திராட்சை, முந்திரி தலா 20 கிராம், 5 கிராம் ஏலக்காய், 2 அடி கரும்பு போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ஆகியவை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரே‌‌ஷன் கடைகளிலும் நேற்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 19, 20-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தெய்வசிகாமணி புரத்தில் உள்ள ஒரு ரே‌‌ஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ரே‌‌ஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வினியோகம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் அந்த கடைக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிக்கொண்டிருந்த அ.தி.மு.க.வினருடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்கும் விதமாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வினியோகம் செய்கிறீர்களா? என்று அ.தி.மு.க.வினரிடம் அ.ம.மு.க.வினர் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் ரே‌‌ஷன் கடை ஊழியர்களிடம் சென்ற அ.ம.மு.க.வினர் பொங்கல் பரிசு தொகுப்புகளை நீங்கள் தான் வழங்க வேண்டும். அரசியல் கட்சியினர் வழங்க அனுமதிக்கக்கூடாது என்று கூறினர். அதன் பின்னர் கடை ஊழியர்கள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கு பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்காக காத்திருந்த பொதுமக்களும் அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசினர். இதையடுத்து அ.தி.மு.க.வினரும், அ.ம.மு.க.வினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். ரே‌‌ஷன் கடையில் அ.தி.மு.க. வினரும், அ.ம.மு.க. வினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story