மாவட்டத்தில், 914 ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடக்கம்


மாவட்டத்தில், 914 ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடக்கம்
x
தினத்தந்தி 9 Jan 2020 10:15 PM GMT (Updated: 9 Jan 2020 7:18 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 914 ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நேற்று தொடங்கியது.

நாமக்கல், 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீள கரும்புத் துண்டு ஆகியவற்றுடன் ரூ.1,000-ம் வழங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 5-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி வினியோகம் செய்து தொடங்கி வைத்தார். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் பொன்விழா நகர் ரே‌‌ஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வகுரம்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இதேபோல் நாமக்கல் தாலுகாவில் உள்ள 130 ரே‌‌ஷன் கடைகள் உள்பட மாவட்டத்தில் 914 ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி நாமக்கல் தாலுகாவில் 72 ஆயிரத்து 87 குடும்ப அட்டைதாரர்களுக்கும், ராசிபுரம் தாலுகாவில் 98 ஆயிரத்து 465 குடும்ப அட்டைதாரர்களுக்கும், திருச்செங்கோடு தாலுகாவில் 97 ஆயிரத்து 383 குடும்ப அட்டைதாரர்களுக்கும், சேந்தமங்கலம் தாலுகாவில் 57 ஆயிரத்து 977 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

மேலும் கொல்லிமலை தாலுகாவில் 13 ஆயிரத்து 96 குடும்ப அட்டைதாரர்களுக்கும், மோகனூர் தாலுகாவில் 35 ஆயிரத்து 872 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பரமத்திவேலூர் தாலுகாவில் 53 ஆயிரத்து 440 குடும்ப அட்டைதாரர்களுக்கும், குமாரபாளையம் தாலுகாவில் 79 ஆயிரத்து 95 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 7 ஆயிரத்து 415 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அதற்காக நேற்று முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை தெருவாரியாக பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கவும், 13-ந் தேதி விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story