கர்நாடக மந்திரிசபை 17-ந் தேதி விரிவாக்கம்; முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


கர்நாடக மந்திரிசபை 17-ந் தேதி விரிவாக்கம்;  முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2020 12:15 AM GMT (Updated: 9 Jan 2020 7:45 PM GMT)

வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்படும் என்றும் வருகிற 17-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு அமைந்தது. 14 மாதங்களுக்கு பிறகு 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்களுக்காகவே மந்திரிசபையில் 16 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் முடிந்ததும் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று எடியூரப்பா ஏற்கனவே கூறினார். ஆனால் இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் மந்திரிசபை விரிவாக்கம் இன்னும் நடைபெறவில்லை.

இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சாதி ரீதியாக பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டி இருப்பதால், மந்திரிசபையை மாற்றி அமைக்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். மந்திரிசபையில் இருந்து யாரை நீக்குவது என்பது குறித்து எடியூரப்பா ஆலோசித்து வருகிறார். மந்திரி பதவி ஏற்ற பிறகே சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது என்று இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே எடியூரப்பா சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டிருந்தார். இதனால் மந்திரிசபை விரிவாக்கம் ஜனவரி மாத இறுதியில் தான் நடைபெறும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதுவரை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்க தயாராக இல்லை என்று தெரிகிறது. மந்திரிசபையை உடனே விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எடியூரப்பா தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த அவர் எனது வெளிநாட்டு பயணம் அனேகமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார். சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு அதாவது வருகிற 17-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசினார்.

சங்கராந்திக்கு முன்பு டெல்லிக்கு சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் பெற உள்ளதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார். எடியூரப்பாவின் இந்த முடிவால், மந்திரி பதவியை எதிர்நோக்கி இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story