ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - வாலிபர் கைது


ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2020 3:45 AM IST (Updated: 10 Jan 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் கடைத்தெருவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் உள்ள எந்திரத்தை நேற்று அதிகாலை மர்மநபர் ஒருவர் கடப்பாரையால் உடைத்து கொண்டு இருந்தார். இதனை அந்த வழியாக சென்ற மீன் வியாபாரி பார்த்தார். உடனே அந்த நபர் தான் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு, விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் ரூபாதேவி, குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க அந்த நபர் முயற்சி செய்தது தெரியவந்தது. மர்மநபர் விட்டு சென்ற மோட்டார்சைக்கிளை கைப்பற்றிய போலீசார், அது யாருக்கு சொந்தமானது? என விசாரணை நடத்தினர். அப்போது ஆலத்தம்பாடியை அடுத்த இளவரசநல்லூரில் உள்ள ஒருவருக்கு சொந் தமானது என்பது தெரியவந்தது.

உடனே போலீசார் அங்கு சென்று அந்த நபரிடம் விசாரித்ததில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மோட்டார்சைக்கிளை மேட்டுப்பாளையம் தெற்குத்தெருவை சேர்ந்த செல்வராஜன் மகன் ஜவஹர்பாபு (வயது24) என்பவரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வீட்டில் பதுங்கி இருந்த ஜவஹர்பாபுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜவஹர்பாபு திருச்சியில் உள்ள ஒரு ஜவுளிகடையில் வேலை பார்த்து வருவதும், அவர் ஒரு பெண்ணை காதலித்து வருவதும் தெரியவந்தது.

காதலிக்கு முன்னால், ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட அவருக்கு போதுமான வருமானம் இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவஹர்பாபுவை கைது செய்தனர். ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story