தலைமறைவாக இருந்த பிரபல தாதா இஜாஜ் லாக்டாவாலா கைது; பீகாரில் பிடிபட்டார்


தலைமறைவாக இருந்த பிரபல தாதா இஜாஜ் லாக்டாவாலா கைது; பீகாரில் பிடிபட்டார்
x
தினத்தந்தி 10 Jan 2020 5:08 AM IST (Updated: 10 Jan 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

தலைமறைவாக இருந்த பிரபல தாதா இஜாஜ் லாக்டாவாலா பீகாரில் பிடிபட்டார்.

மும்பை, 

மும்பையை சேர்ந்த பிரபல தாதா இஜாஜ் லாக்டாவாலா (வயது50). இவர் மீது மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மும்பை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் நிலுவையில் உள்ளன. முதலில் இஜாஜ் லாக்டாவாலா, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியாக இருந்தார். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து சோட்டாராஜன் கும்பலில் சேர்ந்தார். அதன்பிறகு அவரிடம் இருந்து பிரிந்து கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் போலீசாரிடம் சிக்காமல் வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி இஜாஜ் லாக்டாவாலாவின் மகள் ஷிபா சாகித் சேக் போலி பாஸ்போர்ட் மூலம் நேபாளம் தப்பிச்செல்ல முயன்றபோது, போலீசாரிடம் சிக்கினார். கார் பகுதியை சோ்ந்த கட்டுமான அதிபரை மிரட்டிய வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, இஜாஜ் லாக்டாவாலா பீகார் மாநிலம் பாட்னாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற மும்பை போலீசார், பீகார் போலீசார் உதவியுடன் இஜாஜ் லாக்டாவாலாவை கைது செய்தனர். இந்த தகவலை நேற்று மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘‘இஜாஜ் லாக்டாவாலா மீது மும்பையில் 25 வழக்குகளும், மாநிலத்தின் பிற பகுதிகளில் 2 வழக்குகளும் உள்ளன. தற்போது அவர் மீது புகார் அளிக்க 80 பேர் முன்வந்துள்ளனர். மோக்கா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார். அந்த வழக்குகள் தற்போது விசாரிக்கப்படும். இஜாஜ் லாக்டாவாலா போலி ஆவணங்கள் மூலம் கனடா, மலேசியா, அமெரிக்கா, லண்டன், நேபாளம் ஆகிய நாடுகளில் தங்கி இருந்து உள்ளார். அந்த போலி ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாதா இஜாஜ் லாக்டாவாலாவை போலீசார் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை வருகிற 21-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.


Next Story