தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யவேண்டும் - கலெக்டர் ஷில்பா பேச்சு


தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யவேண்டும் - கலெக்டர் ஷில்பா பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2020 10:45 PM GMT (Updated: 10 Jan 2020 2:46 PM GMT)

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை, 

தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-

குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் நமது மாவட்டத்தில் 50 குழந்தைகளுக்கு ஒரு பள்ளி வீதம் 2 ஆயிரத்து 500 குழந்தைகளுக்காக மாவட்டத்தில் 50 இடங்களில் சிறப்புச் பள்ளிகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்புப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் 2 முதல் 3 ஆண்டுகளில் கல்வியில் ஆர்வமூட்டப்பட்டு முறையான பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 5 ஆயிரத்து 663 குழந்தைகள் பள்ளியில் சேர்க் கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 67 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

5 ஆயிரத்து 555 குழந்தைகளுக்கு தொழிற்கல்வி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு நல்வழிப்படுத்தப்பட்டு உள்ளார்கள். தற்போது 14 இடங்களில் 287 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு, நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் பஸ் பாஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடித்து மேற்படிப்பினை தொடரும் குழந்தைகளுக்கு மாநில அரசு மூலம் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.

ஆமீன்புரம், நடராஜபுரம், துரைசாமிபுரம், திசையன்விளை மற்றும் திருமலைப்பப்புரம் ஆகிய இடங்களில் உள்ள சிறப்பு பயிற்சி மைய செயல்பாடுகளில் குறைகள் இல்லை. மாவட்டத்தில் 5 சிறப்பு பயிற்சி மையங்கள் தவிர மற்ற சிறப்புப் பயிற்சி மையங்களில் குழந்தைகளின் வருகை குறைவாகவே உள்ளது.

சிறப்பு பயிற்சி மைய குழந்தைகளை பாரத பிரதமருடன் ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிற 7.2.2020 அன்று டில்லி அழைத்து செல்வதற்கு எனது தலைமையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயிலும் குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தேசிய குழந்தை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஹெலன் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story