எச்.ஐ.வி. குறித்து அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி பேச்சு


எச்.ஐ.வி. குறித்து அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2020 10:45 PM GMT (Updated: 10 Jan 2020 2:46 PM GMT)

எச்.ஐ.வி. குறித்து அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரியில் சுகாதாரத்துறையின் சார்பில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது:-

உலக அளவில் எச்.ஐ.வி. தொற்று என்பது பெரிய சவாலாக உள்ள பொது சுகாதார பிரச்சினை ஆகும். எச்.ஐ.வி. பரவாமல் தடுக்கும் பொருட்டும், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் உலக எய்ட்ஸ் தினம் உலகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு உலக எய்ட்ஸ் தின கருத்து ‘சமூக பங்களிப்பின் மூலம் எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தை ஏற்படுத்துதல்“ என்ற தலைப்பில் அனுசரிக்கப்பட்டது.

உலக அளவில் சுமார் 3.70 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் 21.4 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 1.41 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எச்.ஐ.வி. நோய் தொற்றானது அறியாமையால் பரவுகிறது. இன்றைய அளவில் இந்த நோயை முழுமையாக குணப்படுத்த மருந்துகள் இல்லை. ஆனால் வாழ்நாளை நீட்டிக்க பல மருந்துகள் அரசாங்கத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அரசு உதவிகளும், அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்படுகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிய 80 நம்பிக்கை மையங்களும், 8 சுகவாழ்வு மையங்களும், 3 அரசு ரத்த வங்கிகளும், ஒரு ஏ.ஆர்.டி. மையமும், ஒரு இலவச சட்ட உதவி மையம் மற்றும் 4 தொண்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.

மக்கள் அனைவரும் எச்.ஐ.வி. பற்றி தாங்கள் தெரிந்துகொண்டதை குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இதன்மூலம் எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இல்லாத தமிழகம் உருவாக்கிட வேண்டும். பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பால் இந்திய அளவில் எச்.ஐ.வி. தாக்கம் 57 சதவீதம் வரை புதிய எச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் குறைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் எந்த ஒரு நபரோ, குடும்பமோ அல்லது குழந்தைகளோ பாதிக்கப்படக்கூடாது என்ற உறுதியுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். எச்.ஐ.வி. பற்றி மேலும் அறிய ‘1800 419 1800“ என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரும், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலருமான கிரு‌‌ஷ்ணலீலா, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருவாசகமணி, தூத்துக்குடி துணை இயக்குனர் (காசநோய் மையம்) சுந்தரலிங்கம், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி தலைமை மருத்துவர் சாந்தி, நுண்ணுயிரியல் துறை தலைவர் ஜெயமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story