ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்


ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்
x
தினத்தந்தி 11 Jan 2020 4:15 AM IST (Updated: 10 Jan 2020 9:49 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க சென்றபோது கணவர் கண்எதிரேயே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

செங்குன்றம். 

சென்னை வியாசர்பாடியை அடுத்த சர்மா நகரைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி மகாலட்சுமி(வயது 48). இவர்களுக்கு 3 மகள்கள். இவர்களில் 2 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் திருமணத்துக்காக காத்திருக்கிறாள்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கல் பகுதியில் இவர்கள் குடும்பத்துடன் குடியேறினர். நேற்று காலை விநாயகமூர்த்தி தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கச் சென்றார்.

செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, திருவள்ளூரில் இருந்து எண்ணூருக்கு சாம்பல் லோடு ஏற்றுவதற்காக வந்த லாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மகாலட்சுமி மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மகாலட்சுமி, சம்பவ இடத்திலேயே கணவர் கண்எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திருவள்ளூரை சேர்ந்த கர்ணன்(46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story