68,156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து, 19-ந் தேதி வழங்கப்படுகிறது


68,156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து, 19-ந் தேதி வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 10 Jan 2020 9:45 PM GMT (Updated: 10 Jan 2020 5:59 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 68,156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துதல் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசுகையில், 

அரியலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரே தவணையாக 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 68,156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், பள்ளிகள் மற்றும் சத்துணவு கூடங்களில் வழங்கப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க நகர்புறங்களில் 46 மையங்களும், ஊரகப் பகுதிகளில் 496 மையங்களும் என மொத்தம் 542 மையங்கள் செயல்பட உள்ளன. 6 நடமாடும் மருத்துவக்குழு மூலமாகவும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் மொத்தம் 2,340 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இப்பணிகளுக்கு 45 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. எனவே, அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு, ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் வருகிற 19-ந் தேதியும் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஹேமசந்த்காந்தி, துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் நெடுஞ்செழியன் மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story