ஊரக புத்தாக்க திட்டம் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் - கலெக்டர் ராமன் தகவல்
ஊரக புத்தாக்க திட்டம் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை ஒப்புதல் மற்றும் திட்டம் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்புகள் உருவாக்குதல் ஆகியவை மூலம் தொழில் வளத்தையும் அதன் நிலைத்த தன்மையையும் உருவாக்கி ஊரகப் பகுதிகளில் பெரும் மாற்றம், வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், 26 மாவட்டங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 994 ஊராட்சிகளில் ரூ.918 கோடியே 20 லட்சத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இதில் சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, சங்ககிரி, ஆத்தூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 154 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே 2 சமூக வள பயிற்றுனர்கள் மூலம் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பகுப்பாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு இத்திட்ட செயலாக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாராத தொழில் வாய்ப்புகளின் நிலை மற்றும் புதிதாக மேற்கொள்ள வாய்ப்புள்ள தொழில்களை கண்டறியப்படும். இத்திட்டத்தில் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களே முதன்மை பயனாளிகள். எனவே ஊரக புத்தாக்க திட்டம் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே இந்த திட்டம் மூலம் புதிய தொழில் முனைவோரை உருவாக்க அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மகளிர் திட்ட அலுவலர் செல்வ குமார், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் பி.மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story