ஓராண்டுக்கும் மேலாக அமைச்சர்களிடம் கோப்புகள் தேக்கம் - கவர்னர் கிரண்பெடி புகார்


ஓராண்டுக்கும் மேலாக அமைச்சர்களிடம் கோப்புகள் தேக்கம் - கவர்னர் கிரண்பெடி புகார்
x
தினத்தந்தி 10 Jan 2020 11:15 PM GMT (Updated: 10 Jan 2020 8:27 PM GMT)

புதுவையில் ஓராண்டுக்கும் மேலாக அமைச்சர்களிடம் கோப்புகள் தேங்கியுள்ளது என்று கவர்னர் கிரண்பெடி புகார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. மாநில தேர்தல் ஆணையரை நியமனம் செய்த விவகாரத்தில் தற்போது கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஊழல் இல்லாத எதிர்காலத்திற்கான புதுச்சேரியை தயார்படுத்தியாக வேண்டும். அரசின் திட்டங்களை பெற பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது. அரசு கோப்புகளை அனுப்புவதில் தாமதம் இருக்க கூடாது. சில அமைச்சர்களின் அலுவலகங்களில் ஒரு ஆண்டுக்கும் மேலாக சில கோப்புகள் தேங்கி கிடக்கிறது. அந்த கோப்புகளை கவர்னர் மாளிகை தற்போது காலம் கடந்து பெறுகிறது. இதன் காரணமாக அமைச்சர்களிடம் தேங்கும் கோப்புகளை திரும்ப பெற அரசு செயலாளர்கள் தயங்குகின்றனர்.

புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு கோப்புகளின் இயக்கத்தையும் வெளிப்படையானதாக மாற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே ஒரு சில துறைகளில் ‘பிளாக் செயின்’ முறையின் மூலமாக கோப்புகள் எங்கே இருக்கிறது என அறியும் தொழில்நுட்பம் இருக்கிறது. எனவே அனைத்து துறைகளிலும் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப மென்பொருட்களை சிறந்த முறையில் பயன்படுத்தாமல் ஒரு நகரம் ஸ்மார்ட் நகரம் ஆகாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story