நாகர்கோவிலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2020 3:47 AM IST (Updated: 11 Jan 2020 3:47 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் நாகர்கோவிலில் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள், மாணவ அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் குமரி மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று நாகர்கோவில் இளங்கடை அம்துல்காதர் மருத்துவமனை எதிரே உள்ள மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டார் ஜமாத் செயலாளர் பீர்முகமது தலைமை தாங்கினார். மாவட்ட திருவருட்பேரவை பொருளாளர் ஷாகுல் அமீது வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ.கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கையில் தேசிய கொடி ஏந்தியபடியும், சட்டை பையில் தேசிய கொடியை குத்தியும் இருந்தனர்.

மேலும் போராட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. நூர் முகமது, கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், தி.மு.க மாநகர செயலாளர் மகேஷ், பொதுக்குழு உறுப்பினர் சேக் தாவூத் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக பேரணி நடந்தது. பேரணியானது இளங்கடை மைதானத்தில் இருந்து புறப்பட்டு காதர் தெரு, கச்சேரி ரோடு வழியாக மீண்டும் மைதானத்தை வந்தடைந்தது. 

Next Story