மாவட்ட செய்திகள்

குமரி போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? புதிய தகவல்கள் + "||" + How was the Kumari police officer shot dead? New information

குமரி போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? புதிய தகவல்கள்

குமரி போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? புதிய தகவல்கள்
குமரி சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாகர்கோவில், 

குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் வில்சன். இவர் 8-ந் தேதி இரவு களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அதே சமயம், களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ரெகுபாலன் அன்றைய தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அவர் இரவு 9.20 மணிக்கு வில்சன் பணியில் இருந்த சந்தை ரோடு சோதனைச்சாவடியை தணிக்கை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கோழிவிளை திருப்பத்தில் அவர் சென்றபோது, சோதனைச்சாவடியில் பணியில் இருந்த வில்சனை ஒருவர் சோதனைச்சாவடியில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு மாறி, மாறி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

மற்றொருவர் தான் வைத்திருந்த வெட்டுக்கத்தியால் வில்சனை பல இடங்களில் வெட்டினார். இதைப்பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ரெகுபாலன் சத்தம்போட்டுக் கொண்டே அவரை காப்பாற்ற அருகில் செல்ல முயன்றபோது, 2 பேரில் ஒருவன் பக்கத்தில் வந்தால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளான்.

ரெகுபாலனுக்கு ஆதரவாக பக்கத்தில் இருந்தவர்கள் குரல் எழுப்பி சத்தம் போட்டுள்ளனர். உடனே அவர்கள் 2 பேரும் பக்கத்தில் உள்ள பள்ளிவாசல் பின்பகுதி வழியாக காம்பவுண்டுக்குள் ஏறிக்குதித்து சென்று விட்டனர். ஆனாலும் ரெகுபாலன் அவர்கள் 2 பேரையும் துரத்திப் பிடிக்க முயன்றார். ஆனால் அப்பகுதி மக்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வில்சனை முதலில் காப்பாற்றுங்கள் என்று கதறியவாறு கூறினர்.

இதையடுத்து வில்சனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றபோது இன்ஸ்பெக்டர் சொர்ணலதா அங்கு வந்துள்ளார். வில்சனை இன்ஸ்பெக்டரின் ஜீப்பில் வைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். குழித்துறை அரசு மருத்துவமனையில் வில்சனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சோதனைசாவடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்த 2 பேரின் உருவமும் பதிவாகி இருந்தது.

வில்சன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்து களியக்காவிளைக்கு வந்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதியிடமும் போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காண்பித்து விவரம் தெரிவித்தனர். அந்த வீடியோ காட்சிகளில் வில்சன் சோதனை சாவடியில் பணியில் இருக்கும்போது திடீரென தலையில் குல்லா அணிந்து வந்த 2 பேர் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டிவிட்டு அருகில் உள்ள பள்ளிவாசல் காம்பவுண்டுக்குள் ஏறிக்குதித்து சென்றதும், அங்கு தேசிய நெடுஞ்சாலையில் தயாராக நிறுத்தி வைத்திருந்த காரில் தப்பிச் சென்றதும் பதிவாகி இருந்தது. களியக்காவிளையில் இருந்து தப்பிச்சென்ற அவர்கள் கேரள மாநில பகுதிக்கு சென்றுள்ளனர். கேரள போலீசாரும் அவர்களை தேடி வருகிறார்கள். இதன் அடிப்படையில் குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், களியக்காவிளை இன்ஸ்பெக்டர் சொர்ணலதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மாத விடுப்புக்கு பிறகு பணியில் சேர்ந்த 3-வது நாளில் மரணம்

* கொலை செய்யப்பட்ட வில்சன் 1986-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். முதன் முதலில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் போலீசாக பணியாற்றினார்.

* அதன்பிறகு சென்னை மாநகர ஆயுதப்படைக்கு சென்றார்.

* பின்னர் குமரி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட அவர் 1996, 1997-ம் ஆண்டுகளில் அதிவிரைவுப்படையில் இருந்தார்.

* இதையடுத்து போலீஸ் நிலைய பணிக்கு மாற்றப்பட்டார். முதன்முதலில் கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்திலும், பின்னர் மார்த்தாண்டம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு, பூதப்பாண்டி போலீஸ் நிலையங்களிலும் பணிபுரிந்தார்.

* கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

* அதையடுத்து மீண்டும் குமரி மாவட்டத்துக்கு திரும்பிய அவர் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். கடைசியாக களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தார்.

* இதற்கிடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஏட்டாக இருந்த வில்சன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்.

* கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் வில்சன் படுகாயம் அடைந்தார். இதனால் சிகிச்சை பெற்று வந்த அவர் 2 மாத காலம் மருத்துவ விடுப்பில் இருந்தார். கடந்த 6-ந் தேதி தான் மீண்டும் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு அவர் களியக்காவிளை சோதனை சாவடியில்தான் பணியாற்றி வந்தார். சிகிச்சைக்கு பிறகு பணியில் சேர்ந்த 3-வது நாளில் வில்சன் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.