பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரிசையில் காத்திருந்த சிறுவன் மயங்கி விழுந்து சாவு - நன்னிலம் அருகே பரிதாபம்


பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரிசையில் காத்திருந்த சிறுவன் மயங்கி விழுந்து சாவு - நன்னிலம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 10 Jan 2020 11:00 PM GMT (Updated: 10 Jan 2020 11:24 PM GMT)

நன்னிலம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரிசையில் காத்திருந்த சிறுவன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

நன்னிலம், 

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ரே‌‌ஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.1,000, அரிசி, சர்க்கரை, முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ரே‌‌ஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நீண்ட வரிசையில் மக்கள் பல மணிநேரம் காத்திருந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவருடைய மகன் நடராஜன் (வயது 17). இவர் நேற்று முன்தினம் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக அங்குள்ள ரே‌‌ஷன் கடைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசு தொகுப்பு வாங்க பொதுமக்கள் வரிசையில் காத்திருந்துள்ளனர். சிறுவனும் வரிசையில் நின்றுள்ளார்.

இந்த நிலையில் வரிசையில் நின்று கொண்டிருந்த நடராஜன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நடராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரிசையில் காத்திருந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story