வழக்கை ரத்து செய்யக்கோரிய, நெல்லை கண்ணன் மனு குறித்து அரசுக்கு நோட்டீஸ் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
நெல்லை மேலப்பாளையத்தி்ல் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, நெல்லை கண்ணன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய போது பிரதமர் மோடி குறித்தும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா குறித்தும் நான் அவதூறாக பேசியதாக பல்வேறு போலீஸ்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, அதன்பேரில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட பேச்சு வழக்கிலேயே “சோலியை முடிக்கலியா?” என பேசப்பட்டது. அதன் பொருள் வேலை. அதாவது அரசியலில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவில்லையா? என்ற அர்த்தத்தில்தான் பேசப்பட்டது. உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் அல்ல. ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நெல்லை கண்ணன் ஜாமீன் கோரிய மனு நெல்லை மாவட்ட கோர்ட்டில் உள்ளது. எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பா.ஜ.க. சார்பில் ஆஜரான வக்கீலும், மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரர் மனு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story