நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் தோல்வி: பா.ஜனதா மீது கிராமப்புற மக்கள் அதிருப்தி; சிவசேனா சொல்கிறது


நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் தோல்வி: பா.ஜனதா மீது கிராமப்புற மக்கள் அதிருப்தி; சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 11 Jan 2020 12:13 AM GMT (Updated: 11 Jan 2020 12:13 AM GMT)

நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அக்கட்சி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளதை காட்டுகிறது என சிவசேனா தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் நாக்பூர், அகோலா, வாஷிம், துலே, நந்துர்பர், பால்கர் ஆகிய 6 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரின் சொந்த மாவட்டமான நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்தை பாரதீய ஜனதா காங்கிரசிடம் பறிகொடுத்து விட்டது.

நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்தின் 58 வார்டுகளில் பாரதீய ஜனதாவுக்கு 15 இடங்கள் மட்டுமே கிடைத்தது. காங்கிரஸ் 30 இடங்களில் வெற்றி பெற்றது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா'வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

நாக்பூர், அகோலா, வாஷிம், நந்துர்பர், பால்கர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சிகள் சிறப்பாக செயல்பட்டு உள்ளன.

நிதின் கட்காரி, தேவேந்திர பட்னாவிசின் சொந்த மாவட்டத்திலேயே பாரதீய ஜனதா தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்குள் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தல் முடிவு கிராமப்புற மக்கள் பாரதீய ஜனதா மீது அதிருப்தியில் உள்ளதை காட்டுகிறது.

சட்டசபை தேர்தலிலும் நாக்பூரில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டது. தற்போது இங்கு மாவட்ட பஞ்சாயத்தை பாரதீய ஜனதாவிடம் இருந்து கைப்பற்றி உள்ளது. நந்துர்பர் உள்ளிட்ட மற்ற மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் பாரதீய ஜனதாவின் கதை முடிந்து இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story