தேர்தல் நடத்தும் அதிகாரியை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


தேர்தல் நடத்தும் அதிகாரியை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2020 4:30 AM IST (Updated: 11 Jan 2020 8:11 PM IST)
t-max-icont-min-icon

திருமானூர் ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அதிகாரியை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதில் அ.தி.மு.க. 6 இடங்களையும், தி.மு.க. 11 இடங்களையும், தே.மு.தி.க. 1 இடத்தையும், பா.ம.க. 1 இடத்தையும், சுயேச்சைகள் 2 இடங்களையும் கைப்பற்றின. இதில் சுயேச்சைகள் இருவரும் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக இருந்ததால் அ.தி.மு.க. 10 என்ற கணக்கோடும், தி.மு.க. 11 என்ற கணக்கோடும் இருந்து. இதனால் ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தலில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது. அதற்கென நேற்று காலை முதலே பதட்டமான நிலை நீடித்திருந்ததால் அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சாலை மறியல்

இதில் ஒன்றிய குழு தலைவர் பதவிக்காக அ.தி.மு.க. சார்பில் 17-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலைமதி வடிவழகனும், தி.மு.க. சார்பில் 10 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுமதி அசோக்சக்கரவர்த்தியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதன்பின் நடத்தப்பட்ட மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் 10 வாக்குகளையும், தி.மு.க. வேட்பாளர் 11 வாக்குகளையும் பெற்றனர். பின் இதில் அதிகப்படியான வாக்குகளை பெற்ற தி.மு.க. வேட்பாளர் சுமதி அசோக் சக்கரவர்த்தி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என தேர்தல் நடத்தும் அதிகாரி சீதாலட்சுமி அறிவித்தார்.

தி.மு.க. வெற்றி பெற்றதை வெளியில் உள்ள ஆதரவாளர்களுக்கு தெரிவிப்பதற்காக தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் வெளியே வந்து சைகை மூலம் வெற்றி பெற்றதை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வெளியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான தி.மு.க. ஆதரவாளர்கள் கர கோ‌‌ஷங்கள் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அப்போது திடீரென அங்கு வந்த நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. ஆதரவாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு உள்ள தஞ்சையில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

தொடர்ந்து அவர்கள் வாக்குகளை சரியாக என்னவில்லை என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்றும் பல்வேறு கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனால் ஒருபுறம் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்து அவர்களும், சாலையின் நடுவே கூடி ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேலயும், அலுவலகத்தின் உள்ளே இருந்த அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வாக்குகள் எங்கள் முன்னிலையில் தான் எண்ணப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி சரியாகத்தான் அறிவித்தார் என ஒன்றிய கவுன்சிலர்கள் கூறியதை அடுத்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் தஞ்சை- அரியலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story