நெல்லையில் சமய நல்லிணக்க பொங்கல் விழா - கலெக்டர் ஷில்பா பங்கேற்பு
நெல்லையில் சமய நல்லிணக்க பொங்கல் விழா நடந்தது. இதில் கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு பொங்கலிட்டார்.
நெல்லை,
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நெல்லை மாவட்ட கிளை அலுவலகத்தில் சர்வ சமய நல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டரும், செஞ்சிலுவை சங்கத்தின் தலைவருமான ஷில்பா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மரியசூசை, பொருளாளர் பிரேமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சேர்மன் சார்லஸ் பிரேம்குமார் விழாவை தொடங்கி வைத்தார். மூத்த உறுப்பினர் சிவராமலிங்கம் தண்ணீர் வளத்தை பேணி பாதுகாப்பது குறித்து பேசினார். இதில் அருட்சகோதரி சபீனா, அந்தோணி குரூஸ் அடிகளார், நைனாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பழங்கால நாணயம் மற்றும் பாரம்பரிய அரிய பொருட்களின் கண்காட்சி நடந்தது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கினார். பதிவாளர் சந்தோஷ்பாபு முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கலிட்டு, கதிரவனை வணங்கி வழிபாடு செய்தனர்.
இதில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பரதநாட்டியம், கரகாட்டம், சிலம்பாட்டம், சுருள்வாள் விளையாட்டு போன்ற சாகசங்களை செய்து காட்டினர். உறியாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இளைஞர் நலத்துறை இயக்குனர் (பொறுப்பு) வெளியப்பன் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், தென்சென்னை தமிழ் சங்கம் ஆகியவை சார்பில், கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் உமாதேவி வரவேற்றார். நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பேசினார்.
தொடர்ந்து மாணவிகளுக்கு பேச்சு, கவிதை போட்டிகள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலாகோபி, ஆனந்த லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story