அரக்கோணம் அருகே, தண்டவாளத்தில் விரிசல்; எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் - பயணிகள் அவதி


அரக்கோணம் அருகே, தண்டவாளத்தில் விரிசல்; எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் - பயணிகள் அவதி
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 4:44 PM GMT)

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

அரக்கோணம், 

சென்னையில் இருந்து காட்பாடி செல்லும் ரெயில் மார்க்கத்தில் ரெயில்வே ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் பகுதியில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்ட போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பெங்களூரு மெயில், சென்னையில் இருந்து மதுரை செல்லும் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ், வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 4 ரெயில்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

பின்னர் அரக்கோணத்தில் இருந்து ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், சிப்பந்திகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாள விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் போராடி தண்டவாள விரிசலை நள்ளிரவு 1 மணி அளவில் சரிசெய்தனர். அதைத் தொடர்ந்து நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக பயணிகள் அவதியடைந்தனர்.

தண்டவாள விரிசல் ஏற்பட்ட பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறைவான வேகத்தில் சென்றது.

ரெயில்வே ஊழியர்கள் சரியான நேரத்தில் தண்டவாள விரிசலை கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை-காட்பாடி ரெயில் மார்க்கத்தில் அடிக்கடி தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன்பு ரெயில்வே அதிகாரிகள் தண்டவாள பராமரிப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story