வேலூர் மாவட்டத்தில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா - ஊட்டியை விட பெரிதாக அமைகிறது


வேலூர் மாவட்டத்தில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா - ஊட்டியை விட பெரிதாக அமைகிறது
x
தினத்தந்தி 11 Jan 2020 10:15 PM GMT (Updated: 11 Jan 2020 6:09 PM GMT)

தமிழகத்தில் மிகப்பெரியதாக வேலூர் மாவட்டத்தில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர், 

வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப்பண்ணை, நவ்லாக் ஆகியவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டது.

எனவே வேலூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலை பண்ணையுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை மூலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக குடியாத்தம் தாலுகா அகரம்சேரி கிராமத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினருக்கு நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்பூங்காவின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா போன்ற பூங்காக்களின் பரப்பளவை விட இது தான் மிகப்பெரிய பூங்காவாகும்.

இதில் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்கள், இந்து சமய கோவில்களுக்கு உரித்தான தல விருட்சங்கள், ஒவ்வொரு ராசிக்கும் உரித்தான மற்றும் நட்சத்திரங்களுக்கு உரித்தான மரங்கள் மற்றும் செடிகள் கொண்ட நட்சத்திர பூங்கா ஒன்றும் நிறுவப்படும். அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களை பாதுகாக்கும் வகையிலும் செடிகள் நட்டு, விதை வங்கி ஒன்றும் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும்.

நட்சத்திர பூங்காவை பொறுத்தவரை ஒவ்வொருவரும் தங்களுடைய ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த செடி, மரம் நடலாம். ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால் வேலூர் மாவட்டத்தில் பல்லுயிர் பூங்காவாக இப்பூங்கா திகழும்.

மேலும் சித்தமருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய பாரம்பரிய மருத்துவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகை பயிர்கள் அடங்கிய ஒரு பூங்கா அமைக்கப்படும்.

இங்கு செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்களிடம் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும்.

இந்த பொழுதுபோக்கு பூங்காவில் தோட்டக்கலையில் உள்ள அனைத்து தாவரங்களும் அடங்கிய பல பயிர்ப் பூங்கா, நாட்டு தாவரங்கள் அடங்கிய பூங்கா, பல்லடுக்கு பூங்கா, புல் தரை, நடைபாதை, நட்சத்திர பூங்கா, போகன் வில்லா பூங்கா, செம்பருத்தி பூங்கா, சிறிய நிழற்குடிகள், அலங்கார வளைவுகள், வெளி கூட்டரங்கங்கள், உள் கூட்டரங்கங்கள், தாமரை தடாகம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த பூங்கா திகழும்.

செயற்கை நீருற்றுகள், குளங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், குழந்தைகளுக்கென சிறிய புகை வண்டி முதலிய அம்சங்கள் நிறுவப்படும்.

மரம், தாவரங்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் பொறிக்கப்பட்டு பதாகைகள் அமைக்கப்படும்.

மேலும் அவற்றின் சிறப்புகளும் அதில் இடம் பெற்றிருக்கும். அரசு தோட்டக்கலை பண்ணையில் மா, கொய்யா, சப்போட்டா, பலா, நாவல், எழுமிச்சை, மாதுளை, சீதா போன்ற பழ பயிர்கள், காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மானிய விலையில் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story