50 சதவீத கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை: ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு - ஈரோட்டில் பரபரப்பு


50 சதவீத கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை: ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு - ஈரோட்டில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 2020-01-11T23:39:09+05:30)

ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலுக்கு 50 சதவீதம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் மூலம் தலைவர்கள், துணைத்தலைவர்கள் தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரி அழகிரி, வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கர் ஆகியோர் நேற்று காலை தயாராக இருந்தனர். ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்த கவுன்சிலர்கள் 6 பேர். இதில் 3 பேர் அ.தி.மு.க., 3 பேர் தி.மு.க.வை சேர்ந்தவர்களாவர். தேர்தல் கூட்டத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் சு.பிரகாஷ் (2-வது வார்டு), சி.திருமூர்த்தி (5-வது வார்டு), வி.சவுந்திரவள்ளி(6-வது வார்டு) ஆகியோர் வந்து கலந்து கொண்டனர். ஆனால் குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ரா.நீலாவதி (1-வது வார்டு), சி.பத்மாவதி (3-வது வார்டு), பெ.வெள்ளைச்சாமி (4-வது வார்டு) ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும் கூட்டத்தில் பங்கேற்றாலும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்காததால் மறைமுகத்தேர்தலுக்கான கூட்டத்தை கூட்ட முடியவில்லை. கூட்டம் கூட்ட 3-ல் 2 பங்கு கவுன்சிலர்கள் கலந்து கொள்ள வேண்டும். அப்படி என்றால் 4 பேர் பங்கேற்றால் மட்டுமே கூட்டம் நடத்த முடியும். ஆனால் 3 பேர் மட்டுமே கூட்டத்துக்கு வந்ததால் மறைமுக தேர்தலை ரத்து செய்து அதிகாரிகள் அறிவித்தனர்.

இதுபற்றி வட்டார வளர்ச்சி அதிகாரியும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவசங்கர் கூறும்போது, ‘கூட்டம் நடத்த போதிய கவுன்சிலர் கோரம்(எண்ணிக்கை) போதவில்லை. எனவே கூட்டம் மற்றும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்து இருக்கிறோம். ஆணையம் அறிவிக்கும் இன்னொரு தேதியில் மீண்டும் தேர்தல் நடைபெறும்’ என்றார்.

ஈரோடு மாவட்டத்தின் தலைமை இடத்தில் உள்ள ஈரோடு ஒன்றியக்குழு தலைவராக யார் வருவார்? எந்த கட்சி தலைவர் பதவியை கைப்பற்றும்? என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில், தேர்தல் தள்ளி வைப்பு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story