போலி சி.டி.க்கள் தயாரித்து வெளியிடுவதில் குமாரசாமி நிபுணர்; மத்திய மந்திரி சதானந்த கவுடா தாக்கு


போலி சி.டி.க்கள் தயாரித்து வெளியிடுவதில் குமாரசாமி நிபுணர்; மத்திய மந்திரி சதானந்த கவுடா தாக்கு
x
தினத்தந்தி 12 Jan 2020 4:45 AM IST (Updated: 11 Jan 2020 11:43 PM IST)
t-max-icont-min-icon

மங்களூரு கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட்ட விவகாரத்தில், போலி சி.டி.க்கள் தயாரித்து வெளியிடுவதில் நிபுணர் என்று குமாரசாமியை, மத்திய மந்திரி சதானந்த கவுடா கடுமையாக தாக்கி உள்ளார்.

மண்டியா, 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் (டிசம்பர்) 19-ந் தேதி மங்களூருவில் முஸ்லிம் அமைப்பினர் ஊர்வலம் சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். போலீஸ்காரர்களும் பலத்த காயம் அடைந்தனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. துப்பாக்கி சூடு குறித்து போலீசார் விளக்கம் அளிக்கையில், கலவரத்தை தூண்டும் வகையில் போராட்டக்காரர்கள் செயல்பட்டதாலும், போலீஸ் நிலையத்திற்குள் ஆயுதங்களால் நுழைய முயன்றதாலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு என்று தெரிவித்து இருந்தனர். மங்களூரு கலவரம், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.ஐ.டி., மாஜிஸ்திரேட்டு தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மங்களூரு கலவரம் ெதாடர்பாக திடுக்கிடும் வகையில் புதிய வீடியா காட்சிகள் அடங்கிய சி.டி.யை வெளியிட்டார். மேலும் அவர் பேட்டி அளிக்கையில் கூறியதாவது, மங்களூருவில் நடந்த போராட்டத்தின் போது ஒரு ஆட்டோவில் கட்டிட கழிவுகள் கொண்டு செல்லப்பட்டன.

வன்முறை காரணமாக அந்த ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றனர். ஆனால் போலீசார் அந்த ஆட்டோவில் கற்கள் கொண்டு வரப்பட்டதாக கூறியுள்ளனர். தேவையில்லாமல் துப்பாக்கி சூடு நடத்தி 2 பேரை கொன்று உள்ளனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் மண்டியாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் ஒரு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி சதானந்த கவுடா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தின் நன்மைகள் பற்றி விளக்கி கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மங்களூரு வன்முறை தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி புதிய வீடியோ காட்சிகளை வெளியிட்டு உள்ளார். அவர் இந்த வீடியோ காட்சிகளை அரசியல் லாபத்திற்காக மட்டும் தான் வெளியிட்டார். இந்த வீடியோ காட்சிகள் முற்றிலும் பொய்யானது. அவர் ஏன் மங்களூருவில் கலவரம் நடந்த மறுநாளே இந்த வீடியோ காட்சிகளை வெளியிடவில்லை. அந்த வீடியோவில் காக்கி உடை அணிந்திருப்பவர்கள் எல்லாம் போலி போலீஸ்காரர்கள் ஆவார்கள்.

குமாரசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமா தயாரிப்பாளராக இருந்தவர். இது மாதிரியான போலியான சி.டி.க்களை தயாரித்து வெளியிடுவதில் அவர் நிபுணர். அவர் மாதிரி எல்லாம் எங்களால் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story